நாங்குநேரி அருகே தெற்கு விஜயநாராயணம் முஸ்லிம்களே இல்லாத ஊரில் தர்காவில் நடந்த கந்தூரி விழா: இந்துக்களும் இணைந்து நடத்தினர்

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜயநாராயணம் மேத்தா பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா நேற்று நடந்தது. இந்த கிராமத்தில் முஸ்லிம்களே கிடையாது. வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்த முஸ்லிம்கள் இந்துக்கள் வீட்டில் தங்கினர். இதையொட்டி தர்காவில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் கொடி ஊர்வலம் துவங்கியது. மூங்கில் கழையில் கொடியை கட்டி, சந்தனம் குங்குமம் பூ ஆகியவற்றால் அலங்கரித்து நாதஸ்வரம் முழங்க எடுத்து வரப்பட்டது. அப்போது உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் வீட்டு வாசலில் கொடிக்கம்பத்திற்கு மாலை அணிவித்தும், புனித மஞ்சள் நீர் ஊற்றியும் வழிபட்டனர். தர்காவிற்கு வந்தடைந்த கொடியை அங்குள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏற்றி வழிபட்டனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தர்காவில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி ஊதுபத்தி கொளுத்தி பெண்கள் வழிபட்டனர்.

இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நடத்திய இவ்விழா சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Related Stories: