சேலம் ரயில்வே கோட்டத்தில் 28 இடங்களில் விளம்பரம், பார்க்கிங்கிற்கு அனுமதி அளித்ததில் ₹21 கோடி வருவாய்: ஏசி காத்திருப்போர் அறை பராமரிப்பு பணியும் வழங்கல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ஸ்டேஷன்களில் 28 இடங்களில் பார்க்கிங், விளம்பரம் வைத்திருக்கவும், ஏசி பயணிகள் காத்திருப்போர் அறையை பராமரித்து கட்டணம் வசூலித்துக் கொள்ளவும் ₹21 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயில் தனியார் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் விளம்பரம் வைத்துக்கொள்ளவும், பார்க்கிங், பயணிகள் காத்திருப்போர் அறை பாராமரிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தவகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் பார்க்கிங், ஏசி கட்டண பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் வைத்துக் கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு மின்னணு ஏலம் நடத்தப்பட்டது. இந்த மின்னணு ஏலத்தில் ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் பங்கெடுத்து, ஒவ்வொரு பணிக்கும் ஏலம் கேட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக தெற்கு ரயில்வேயில் 64 பணிகள் ₹34.60 கோடிக்கு ஏலம் போனது. இதில், 18 பார்க்கிங், 21 விளம்பர ஒப்பந்தம், 19 பார்சல் பிரிவு பணி, 3 ஏசி கட்டண காத்திருப்பு அறைகள் ஒதுக்கீடானது.

இவற்றில் சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும் 28 பணிகள் ₹21 கோடிக்கு ஏலம் போய்யுள்ளது. சேலம், ஈரோடு உள்பட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் 11 பார்க்கிங் ஸ்டாண்டுகள் ₹15.83 கோடிக்கும், 14 விளம்பர ஒப்பந்தம் ₹3.86 கோடிக்கும், 3 ஏசி கட்டண பயணிகள் காத்திருப்பு அறைகள் ₹1.31 கோடிக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கோட்டத்தில் 8 பணிகள் ₹6.61 கோடிக்கும், மதுரை கோட்டத்தில் 14 பணிகள் ₹2.68 கோடிக்கும், திருச்சி கோட்டத்தில் 7 பணிகள் ₹1.72 கோடிக்கும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 6 பணிகள் ₹1.38 கோடிக்கும், பாலக்காடு கோட்டத்தில் ஒரு பார்க்கிங் ஒப்பந்தம் ₹1.19 கோடிக்கும் ஏலமிடப்பட்டுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ரயில்வேக்கு வருவாய் ஈட்டும் வகையில், ஸ்டேஷன்களில் தனியார் நிறுவனத்தார் விளம்பரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பார்க்கிங் ஸ்டாண்டுகள், ஏசி பயணிகள் காத்திருப்பு அறைகளை குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டப்படுகிறது. சேலம் கோட்டத்தில் 28 பணிகள் ஏலம் விடப்பட்டதில், ₹21 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது,’ என்றனர்.

Related Stories: