பூக்கடையில் ரூ.8 லட்சம், வெள்ளியை திருடி விட்டு ரயிலில் தப்ப முயற்சி: ராஜஸ்தான் வாலிபர்கள் 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாலா ராம்சிங் (48). சென்னை பாரிமுனை பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். பூக்கடை பகுதியில் கிருஷ்ணய்யர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் மற்றும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜு (23) வேலைக்கு சேர்ந்தார். அவரை, தனது வீட்டிலேயே உணவளித்து தங்க வைத்துள்ளார் ஜாலா ராம்சிங்.

தனது மாநிலத்தை சேர்ந்தவர் என்ற நம்பிக்கையில் கடையை திறப்பதற்கான சாவியை ராஜுவிடம் கொடுத்துள்ளார். கடையில் ஏராளமான பணப்புழக்கம் இருப்பதை ராஜு நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் செங்கல்பட்டில் வசிக்கும் நண்பர் மிக்காராம் (30) என்பவருடன் பணத்தை கொள்ளையடிக்க ராஜு திட்டமிட்டார். இதன்படி நேற்றிரவு மிக்காராம் சென்னைக்கு வந்து, ராஜுவுடன் உரிமையாளர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ராஜூ, மிக்காராமுடன் கடையை திறந்து கல்லாவில் இருந்த ₹8 லட்சம் ரொக்கம், 19 வெள்ளி காசுகள், 2 விநாயகர் சிலை, 2 செல்போன் ஆகியவற்றை மூட்டை கட்டிக்கொண்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தப்பி செல்ல முயன்றனர். பூக்கடை பகுதியில் வந்தபோது, ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ சஜித் தலைமையில் போலீசார், இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போதுதான், ஜாலா ராம்சிங் கடையில் இருந்து திருடி விட்டு ராஜஸ்தானுக்கு ரயில் மூலம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை போலீசில், ஜாலா ராம்சிங் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வடமாநில வாலிபர்களையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: