அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி குரங்கு அம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை

கோவை: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

முன்னதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என தெரியவந்தது. திருச்சி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தொற்று வதந்தி பரவியது. அப்பகுதியில், முழுமையாக பரிசோதித்ததில் அது வேறு பிரச்னை என தெரிய வந்தது. கேரள எல்லையில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: