ஆடிப்பூர தேரோட்ட விழாவில் பரபரப்பு புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்தது: 8 பக்தர்கள் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து 8 பக்தர்கள் காயமடைந்தனர். புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி நேற்று காலை தேரோட்டம் நடந்தது. 4 தேர்களில் சாமி சிலைகளை வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பிரகதம்பாள் தேரை நிறுத்த போடப்பட்ட கட்டை மீது ஏறிய வேகத்தில் திடீரென முன்னோக்கி சாய்ந்து கவிழ்ந்தது. அப்போது தேருக்கு அருகில் சென்ற பக்தர்கள் அடியில் சிக்கி அலறினர்.திருக்கோகர்ணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேருக்கு அடியில் சிக்கி காயமடைந்த கலா, வைரவன், ராஜா, குமார் உட்பட 8 பேரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மயக்கமடைந்த 5 பேருக்கு முதலுதவி செய்து அனுப்பினர். இந்த தேர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான்  புதிதாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேரை பக்தர்கள் வேகமாக இழுத்து வந்ததால் அது கவிழ்ந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: