நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் இருந்து டவுன் ஆர்ச் வரை சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை 16 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் மையப்பகுதியில் கார்டனுடன் சிமென்ட் தடுப்பு

நெல்லை:  நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சந்திப்பு புரம் ஈரடுக்கு பாலம் முதல் ஆர்ச் வரையில் 12  மீட்டரில் இருந்து 16 மீட்டராக அகலப்படுத்தும் பணி நாளை (ஆக. 1ம் தேதி) துவங்குகிறது. அத்துடன் சாலையின் மையப்பகுதியில் கார்டனுடன் கூடிய சிமென்ட் தடுப்பு  அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில்  போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் குறுகலாக  இருந்த சாலைகள் அனைத்தும் தற்போது அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தச்சநல்லூர்-  தாழையூத்து சாலை, பாளை மத்திய சிறையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை,  அம்பை சாலையில் சிக்னலில் இருந்து மேலப்பாளையம் வரையிலான சாலைகள்  அகலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல்லை மாநகரின் மிக முக்கியச் சாலையான சுவாமி நெல்லையப்பர் தேசிய நெடுஞ்சாலையையும் அகலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு புரத்தில் ஈரடுக்கு மேம்பாலம் பகுதி முதல் டவுன் ஆர்ச்  வரையிலான சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்திவைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய்கள்  பதிக்கும் பணிக்காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் முழுமையாக மூடப்படாததால் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். உருக்குலைந்த இச்சாலையானது மழை நேரத்தில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

பின்னர் வெயில் நேரத்தில் காயும்போது வீசும் காற்றால் பறந்துவரும் புழுதியானது வாகனஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. இவ்வாறு சுமார் 1 கி.மீ. உருக்குலைந்து காணப்படும் இச்சாலையை கடக்க நீண்டநேரம் ஆகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை முழுமையாக  சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில்  சந்திப்பு புரம் ஈரடுக்கு பாலம் முதல் ஆர்ச் வரையில் 12  மீட்டரில்  இருந்து 16 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது.

அத்துடன் டவுன் ஆர்ச் அருகே உள்ள சாலையும் மாநகராட்சியால் சீரமைக்கப்படும். மேலும்  சாலையின் மையப்பகுதியில் சிமிண்ட் சென்டர் மீடியன் அமைத்து அதில் சிறிய  அளவிலான மலர் செடிகள், குரோட்டன்ஸ் ெசடிகள் அமைத்து பராமரிக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப்பணிகளை நாளை (ஆக. 1ம் தேதி) முதல்  துவக்கி விரைவில் முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்பணி  முடிந்ததும் இச்சாலையில் போக்குவரத்து இடர்பாடுகள் மற்றும் நெரிசல் குறைய  வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சாலை முழுமையாக சீரமைக்கப்பட உள்ளதால் மாநகர வாகனஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: