புது மதுபான கொள்கையை கைவிட்டதால் டெல்லியில் சரக்கு வாங்க குவிந்த குடிமகன்கள்

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கியது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த போதும், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதியான இன்றோடு புது மதுக் கொள்கை முடிவுக்கு வருகிறது. நாளை (ஆகஸ்ட் 1) முதல் மதுபானத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. அதனால் நேற்றிரவு முதல் சரக்கு வாங்க மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர்.

இந்நிலையில், புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு தற்காலிகமாக கைவிடுவதாகவும், 2022-23ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கை வெளியிடும் வரை பழைய கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என டெல்லி மாநில துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில்லறை மதுபானக் கடைகளை டெல்லி அரசே ஏற்று நடத்த உள்ளது. இதன் எதிரொலியாக 468 தனியார் மதுக்கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘டெல்லி அரசு மூலம் நடத்தப்படும் மதுக்கடைகளில் மட்டுமே விற்பனை செய்வதை உறுதிப்படுத்துமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை’ என்றார்.

Related Stories: