முத்துப்பேட்டை செக்கடி தெருவில் சேதமடைந்த கழிவுநீர் வடிகாலால் பொதுமக்கள் அவதி; சீரமைக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை செக்கடி தெருவில் சேதமடைந்த கழிவுநீர் வடிகாலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட செக்கடிதெரு தொடங்கும் பங்களா வாசல் பேருந்து நிறுத்தம் முதல் தியேட்டர் மண்டபம் வரையிலான சிமெண்ட் சாலை சுமார் 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. பல்வேறு தெருக்களையும் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த சிமெண்ட் சாலை தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால், சாலையோர வடிக்காலில் அடிக்கடி எற்படும் அடைப்புகள் காரணத்தினாலும், அப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளாலும் இந்த சிமெண்ட் சாலை முழுமையாக சேதமாகியுள்ளன. இதனால் பல இடங்களில் சாலை பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இதில் குறிப்பாக செக்கடிதெரு நூராங்குண்டு வளைவில் உள்ள சிமெண்ட் சாலை குறுக்கே செல்லும் கழிவுநீர் வடிகால் சேதமாகியுள்ளதால் சிமெண்ட் சாலையும் இருபுறமும் சாலை சேதமாகி மிகப்பெரிய பள்ளமாக உள்ளது.

இதனால் வாகனங்கள் சென்று வர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக தான் பல்வேறு பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் கழிவுநீர் வடிகால் சேதமாகியுள்ளதால் அப்பகுதி மட்டுமின்றி சுற்றுபகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரும் வடிய வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசிகிறது. இதனால் தொற்றுநோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் சேதமாகியுள்ள வடிகளை அகற்றிவிட்டு சாலை இருபுறமும் தடுப்பு சுவர் எழுப்பி புதியதாக சாலை குறுக்கே மினி பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: