எடப்பாடி பழனிசாமியை நீக்கி உள்ளோம் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்: சட்டரீதியிலான போராட்டங்களால் சிக்கல் நீடிப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் சட்டரீதியிலான போராட்டங்கள் நீடிப்பதால் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘‘எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளாக சிலரது பெயரை அறிவித்துள்ளார். இது சட்ட விரோதமான அறிவிப்பு ஆகும். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது என்னிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது, அதை நிராகரிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 50 நிர்வாகிகளை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உள்ளேன். அவர் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கடிதத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் மாறி மாறி தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சட்டப்பேரவைக்கு மனுக்களை அனுப்பியபடி உள்ளனர். நீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் யார் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவான தீர்ப்பு வழங்கும் வரை இந்த பிரச்னை நீடிக்கும். இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சட்டரீதியிலான போராட்டங்களும் நீடித்துக்கொண்டே செல்ல வாய்ப்புள்ளது.

Related Stories: