வெள்ளத்தில் 2 பெண்கள் பலி எதிரொலி குற்றால அருவிகளில் பாதுகாப்பு அரண்: தீயணைப்பு துறை நடவடிக்கை

தென்காசி: குற்றலாத்தில் உயிர் பலியை தடுக்கும் நோக்கத்தில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர். மேக வெடிப்பு காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டிய மழையால் சில நாட்களுக்கு முன் குற்றாலம் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த 6 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 2 பெண்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறையினரை அழைத்து ஆலோசனைகள் கேட்டது.  

அதன்பேரில், நேற்று தீயணைப்பு துறை சார்பில் குற்றாலம் மெயினருவி தடாகத்தில், கயிறு மிதவை டியூப் மற்றும் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி அல்லது தடாகத்தில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படாதவாறு சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு அவற்றில் மிதவை டியூப் என்னும் மிதவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பொழுது இந்த கயிறு அல்லது மிதவை டியூப்பை பிடித்து தப்பித்துக் கொள்ள முடியும். இது தவிர அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு நிலையத்தினருக்கும் மிதவை டியூப் மற்றும் லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: