செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 44 கிலோ இட்லியில் தம்பி உருவம்: சமையல் கலை தொழிற்சங்கம் அசத்தல்

தண்டையார்பேட்டை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இதன் தொடக்க விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓவியங்கள், தம்பி சிலைகள் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு சமையல் கலை தொழிற்சங்க பொதுச் செயலாளர் இட்லி இனியவன், சிறுதானியங்களை கொண்டு 44 கிலோ எடை கொண்ட குதிரை வடிவில் தம்பி சின்னத்தை இட்லியில் செய்து உள்ளார்.

இதனை பொதுமக்கள் பார்வைக்காக காசிமேடு கடற்கரை பகுதியில் நேற்று வைத்திருந்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து, செல்பி எடுத்து சென்றனர். தொடர்ந்து, மெரினா கடற்கரை செல்பி பாயின்ட் பகுதியில் இந்த தம்பி உருவம் வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிற்சங்க பொது செயலாளர் இட்லி இனியவன் கூறுகையில், ‘‘பொதுமக்களிடையே செஸ் போட்டி மற்றும் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 44 கிலோ இட்லியில் தம்பி உருவம் செய்துள்ளோம். 2 முறை செய்தபோது சரியாக வரவில்லை. 3வது முறையாக செய்யும்போது சரியாக வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.

Related Stories: