முக்கிய ரயில் நிலையங்களில் பெட்டிகளை அடையாளம் காண டிஜிட்டல் திரை: மதுரை கோட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

நெல்லை: மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட வேண்டும் என இணைய வழியில் நடந்த மதுரை ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.மதுரை ரயில்வே கோட்ட எல்லைக்கு  உட்பட்ட ரயில்வே வளர்ச்சி, ரயில் தேவைகள், ரயில்வே  குறைகள், ரயில்வே ஆலோசனைகள் குறித்து விவாதிப்பதற்கு, மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நடந்தது.

இக்கூட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், வர்த்தக, தொழில்துறையினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் மொத்தம் 26 பேர் பங்கேற்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தென்னக ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. இதில் 3 பேர் போட்டியிட்ட நிலையில், பாண்டியராஜா தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்  உறுப்பினர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர்.

ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தார். முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, முதுநிலை இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உறுப்பினர்கள் பேசுகையில், ‘‘முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்களை இணைக்கும் வகையில் இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும். ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் கம்பளி போர்வை உடனடியாக வழங்க வேண்டும், முக்கிய ரயில் நிலைய நடைமேடைகளில்  பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தெரிவித்தனர். வரும் காலங்களில் இணைய வழியில் கூட்டங்கள் நடத்தாமல் நேரடியாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதில் ரயில் நிலையங்கள் குறித்தான மேம்பாடுகளை பரிசீலிப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர். புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள் வழங்கும் அதிகாரம் சென்னை தலைமையகத்துக்குதான் உண்டு என பதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: