தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்குதல் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்குதல் விழா நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு குடியரசு தலைவரின் கொடியை பெற்றுக்கொள்கிறார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது சீருடையில் பதவிக்கான கயிறு மற்றும் ஸ்டார்கள் அணிந்துள்ளனர்.

குடியரசு தலைவரின் கொடி வழங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு மாதங்களில் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது சீருடையில் குடியரசு தலைவரின் கொடி கட்டாயம் அணியும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கொடி வழங்குதல் நிகழ்ச்சி வரும் 31ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழக காவல் துறை சார்பில் மிக பிரம்மாண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக சென்னை எழும்பூரில் உள்ள காவல் துறையின் பயிற்சி மைதானமாக ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக காவல் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீஸ் போடப்பட்டுள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘குடியரசு தலைவர் கொடியை’ தமிழநாடு காவல் துறைக்கு வழங்குகிறார். இந்த குடியரசு தலைவர் கொடியை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குடியரசு துணை தலைவரிடம் இருந்து பெற்று கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் என காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: