ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் அப்பர் கயிலைக்காட்சி கோலாகலம்

திருவையாறு: ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் அப்பர் கயிலை காட்சி நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம். அப்பர் பெருமான் சிவபெருமானை காணவேண்டும் என சென்றபோது, அவரது பக்தியை மெச்சிய சிவன் ஆடி அமாவாசை தினத்தில் திருவையாறில் அப்பருக்கு காட்சி கொடுத்தார். இதனால் அப்பர் கயிலை காட்சி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு ஐயாறப்பர் கோயிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: