வெயிலின் தாக்கம் குறைகிறது 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த வெப்பம் மற்றும் வெயில் படிப்படியாக குறையும் என்று ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்திருந்தது. இருப்பினும் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

நேற்றைய நிலவரப்படி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதனால், அதிகபட்சமாக திருச்சி,கரூர், மதுரை விமானநிலையம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, வேலூர் 106 டிகிரி, தஞ்சாவூர், திருத்தணி 104 டிகிரி, சென்னையில் 102 டிகிரி வெயில் நிலவியது.

வட தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி முதல் 111 டிகிரி வரை இருந்தது. இதர மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளில் 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருந்தது. கடலோர மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் இருந்தது. மேலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசியது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும்.

தமிழ்நாட்டில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை நேற்று பெய்தது. மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர்,திருப்பூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 9ம் தேதி 8 இடங்களில் கனமழையும், 10 மற்றும் 11ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வெயிலின் தாக்கம் குறைகிறது 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: