வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு குடியிருப்போர் சங்கத்தினரால் ஆக்கிரமிப்பு

* சிமென்ட் பைப்புகளால் தடுப்பு ஏற்படுத்தி அராஜகம்; நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சென்னை: வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாது என்பதற்காக, குடியிருப்போர் நலச்சங்கத்தினரால் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவை ஆக்கிரமித்து, தெருவின் ஒருமுனையில் சிமென்ட் பைப்புகளை நட்டு தடுப்பு ஏற்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் முக்கிய சாலைகளில் நடைபாதை வசதி என அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் சில தனி நபர்களோ, குடியிருப்பு சங்கத்தினரோ ஆக்கிரமிப்பு செய்வதால் தெருக்களை கடந்து செல்லும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.  பாலவாக்கம் கடற்கரை அருகே பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு உள்ளது. பிரச்னைக்குரிய இந்த தெரு கடற்கரை செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை முடியும் இடத்தில் உள்ளது. அதாவது, இசிஆர் சாலையில் பாலவாக்கத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கலைஞர் கருணாநிதி சாலையில் கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.

கலைஞர் கருணாநிதி சாலையின் இரு பகுதிகளில் உள்ள தெருக்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக, பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு கடற்கரை அருகே உள்ள நிலையில், வசதி படைத்தவர்கள் வாழக்கூடிய தெருவாக உள்ளது. இங்கு வசிக்கக்கூடியவர்கள் சேர்ந்து குடியிருப்போர் நலச் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சங்கத்தை பயன்படுத்தி, பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவில் ஒரு பகுதியை சிமென்ட் பைப்புகளை வரிசையாக நட்டு தடுப்பு ஏற்படுத்தி தெருவுக்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி ஆக்கிரமித்துள்ளனர்.

மாநகராட்சி அமைத்து கொடுத்த தெருவில் குடியிருப்போர் சங்கம் என்ற பெயரில் தடுப்பு ஏற்படுத்தி தங்களது தனிப்பட்ட சாலை போன்று அத்துமீறி பயன்படுத்தி வருவதற்கு அப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டு களாக அந்த தடுப்பை அகற்ற யாரும் முன்வரவில்லை என்று அப்பகுதி மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். தடுப்பு ஏற்படுத்தியுள்ள தெருவின் நடுவில் ஒரு சிமென்ட் பைப்பை மட்டும் எடுத்துள்ளனர்.

சிறு வழி மட்டுமே உள்ள நிலையில், நீண்ட தூரம் சுற்றி வர வேண்டுமே என நினைத்து இரு சக்கர வாகனங்களை மிகவும் கஷ்டப்பட்டு நுழைத்து அந்த வழியாக சென்று வருகின்றனர். கடற்கரை செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக அந்த தெருவுக்குள் நான்கு சக்கர வாகனங்களில் சென்றால் மறுமுனையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், வெளியே செல்ல முடியாமல் அப்படியே ரிவர்ஸ் எடுத்து தான் மீண்டும் மெயின் ரோட்டுக்கு வர முடியும்.

இந்த தெருவை நம்பி உள்ளே சென்றவர்கள் நிலை அந்தோ பரிதாபம் என்றுதான் சொல்ல வேண்டும். தெருவின் மறுமுனை சந்திப்பில் கடற்கரைக்கு செல்லும் மிக முக்கிய இணைப்பு சாலையான ஸ்ரீவெங்கடேஸ்வர நகர் 20வது குறுக்கு தெரு சாலை உள்ளது. இந்த சாலை குறுகலாக உள்ளதால், பலர் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு வழியாக கலைஞர் கருணாநிதி சாலைக்கு செல்ல முயல்கின்றனர்.
ஆனால் அந்த தெரு சந்திப்பில் தான் சிமென்ட் பைப்புகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு இல்லாவிட்டால் எளிதாக கலைஞர் கருணாநி சாலைக்கு வந்து விடலாம். ஆனால் தடுப்பு ஏற்படுத்தியுள்ளதால் பல தெருக்களை கடந்து தான் கலைஞர் கருணாநிதி சாலைக்கு வர முடியும். இது அப்பகுதி மக்களை மட்டுமல்ல, கடற்கரைக்கு வருபவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல திருவான்மியூர் நோக்கி செல்பவர்கள், இந்த தடை இருப்பதால் நீண்ட தூரம் கிழக்கு கடற்கரை சாலையை சுற்றி, பின்னர் யு டர்ன் போட்டு மீண்டும் அதேசாலையில் வரவேண்டிய நிலை உள்ளது.

இந்த தடுப்புகளை அகற்றினால், ஒரே தெரு வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தால் அதன் அருகிலேயே சாலையை கடக்கும் வழி உள்ளது. அதில் எளிதாக திரும்பலாம். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இல்லாததால், நீண்ட தூரம் சுற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயண நேரம், பெட்ரோல் செலவு, போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஏற்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த தெருவில் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டும், இதை அந்த தெருவில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலும், வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது என்ற அராஜக போக்கிலும் குடியிருப்போர் நலச் சங்கம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் தெருவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு தெருவை தனிநபரோ, குடியிருப்பு சங்கங்கங்களோ தங்களுக்கு ஏற்றவாறு தடுப்புகளை ஏற்படுத்துவது சட்டபடி குற்றம் என தெரிந்தும், பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவை குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் ஆக்கிரமித்து தடுப்பு ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வாறு ஏற்படுத்திய தடுப்புகளால் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் அந்த தெரு வழியாக செல்ல முடியவில்லை.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் தடுமாறுகின்றனர். வசதி படைத்தவர்கள் அந்த தெருவில் வசிப்பதால் தங்களது ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை, தடுப்பு ஏற்படுத்தியுள்ள சாலைகளில் வரிசையாக பார்க்கிங் போல நிறுத்தியுள்ளனர். அந்த தெருவே தங்களுக்கு தான் சொந்தம் என்பது போன்று அவர்கள் நடவடிக்கை இருப்பதாக பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கார் பார்க்கிங்காகவும், வெளியாட்கள் தங்கள் தெருக்கள் வழியாக செல்லக் கூடாது என்ற ஆணவப் போக்கிலும் இதுபோன்ற நடவடிக்கையில் குடியிருப்போர் நலச்சங்கம் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே, பனையூரில் தனிநபர் ஒருவர் தனது வீடு அமைந்துள்ள தெருவை வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று செக்போஸ்ட் அமைத்து நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்ட சம்பவம் தான் தற்போது நினைவுக்கு வருகிறது. பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய தெருவை தனிநபர்களோ, குடியிருப்போர் சங்கங்களோ ஆக்கிரமித்து தடுப்பு ஏற்படுத்த கூடாது என்றும், அதை உடனே அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தடுப்பை அகற்றாவிட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியது. இந்த தீர்ப்பு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவில், குடியிருப்போர் நலச்சங்கம் தெருவில் தடுப்பு ஏற்படுத்தியிருப்பதும் அதே அராகஜகத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பை அகற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

The post வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு குடியிருப்போர் சங்கத்தினரால் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Related Stories: