பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை: உலக வங்கி தகவல்

கொழும்பு: இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீ்ர்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்  என்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள உலக வங்கி, பிரச்னைக்கு அடிப்படையான காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக அந்நாட்டு மக்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் மிகுந்த கவலை தரக்கூடியவை என தெரிவித்துள்ள உலக வங்கி இதை கருத்தில் கொண்டே இதுவரை 160 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதேநேரத்தில், மிகப் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாத வரை அந்நாட்டுக்கு உலக வங்கி கடன் வழங்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் உணவுக்கு உத்தரவாதம் இன்றி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருதாக ஐநா உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் 2 கோடியே 16 லட்சம் மக்கள் உள்ள நிலையில், 60 லட்சம் மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 லட்சம் மக்கள் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவித்து வருவது தெரிய வந்துள்ளதாக இலங்கைக்கான ஐநா உலக உணவு திட்ட இயக்குநர் அப்துர் ரஹிம் சித்திக் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையில் உணவு பணவீக்கம் 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களில் சுமார் 53 லட்சம் பேர், குடும்பத்தில் உள்ள இளையோருக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கான உணவை குறைத்துக்கொள்வது, உணவு உண்ண தவிர்ப்பது போன்ற வருந்தத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்துர் ரஹிம் சித்திக் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் அதாவது 62.6 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றி வறுமையில் வாடி வருவதாக தெரிவித்துள்ள சித்திக், கர்ப்பிணிகளும் போதிய உணவு இன்றி கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: