சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் சிலாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்-துணை முதல்வர் தொகுதியில் அவலம்

சித்தூர் : சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் ஸ்லாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  துணை முதல்வர் சொந்த தொகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கங்காதரநெல்லூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், வகுப்பறைகளில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. துணை முதல்வர் நாராயணசாமியின் சொந்த தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அறைகள் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் பள்ளி கட்டிடம் முழுவதும் நனைந்து சுவர்களில் இருந்து தண்ணீர் வடிந்து வருகிறது. சிமெண்ட் ஸ்லாப்புகள் சிதலமடைந்து கீழே விழுந்து வருகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளி அறையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஆந்திர மாநில அரசு ‘நாடு-நேடு’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை சீரமைத்து கார்ப்பரேட் பள்ளிகளுக்கு இணையாக மாற்றி வருகிறது. அதேபோல், வகுப்பறைகளில் மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்படுகிறது. வகுப்பறையில் அடித்தளத்தில் கிரானைட் கற்கள் அமைத்து வருகிறது. ஆனால், கங்காதரநெல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்த அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த உயர்நிலைப்பள்ளி சிதலமடைந்து காணப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனே உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: