கடலூர் அருகே அண்ணனை கொலை செய்த ரவுடியை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரி புலியூர் அருகே அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் 26 வயதான கருப்பு என்கிற கண்ணன். ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை கண்ணன் கம்மியம்பேட்டை வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணனை அரிவாளால் வெட்டியும் தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்தனர். தடுக்க முயன்ற நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சென்ற திருப்பாதிரி புலியூர் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.    

இது தொடர்பாக நடந்த விசாரணையில் கடந்த 2020-ம் ஆண்டு புதுநகரை சேர்ந்த காமராஜ் என்பவரை கண்ணன் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அது தொடர்பாக பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காமராஜின் தம்பியான 17 வயது சிறுவன், கண்ணனை பழிக்குப்பழியாக கொலை செய்ய தனது நண்பர்களுடன் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனின் அக்காவிற்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்தவர், குழந்தைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கப்போவதாக தனது அக்காவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து வெளியூரில் வேலை செய்துவிட்டு துக்க நிகழ்ச்சிக்காக கடலூர் வந்த கண்ணனை, சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவன், அவரது நண்பர்களான சந்திரசேகர், விக்னேஷ், தனுஷ், ராகுல் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் கொலைக்கு பழிக்குப்பழியாக அக்காவின் குழந்தை பிறந்த தினத்தில் ரவுடியை பழிதீர்த்த தம்பியின் செயல் கடலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: