புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு அதிகாரிக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம் உள்பட 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: பல கோடி சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம், நகைகள் சிக்கின

அரியலூர்: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநரின் வீடு, திருமண மண்டபம் உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம், நகைகள் சிக்கியது. அரியலூர் முனியப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (58). புதுக்கோட்டையில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநராக உள்ளார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் சென்றது.

இதைத்தொடர்ந்து அரியலூரில் உள்ள தன்ராஜ் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10 பேர் 3 கார்களில் நேற்று காலை 7 மணிக்கு வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் அரியலூரில் உள்ள தன்ராஜூக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், திருமண மண்டபம், அரியலூர் ஓடக்கார தெருவில் உள்ள தன்ராஜின் மற்றொரு வீடு, பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது மற்ற 2 வீடு என 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம், நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கூத்தூரில் உள்ள தன்ராஜூக்கு சொந்தமான நிலங்கள், பம்ப் செட்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Related Stories: