எய்ம்ஸ் கட்டுமான பணி 6 மாதங்களில் துவங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி இன்னும் 6 மாதத்தில் துவங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கென இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எய்ம்ஸ் விரைவில் அமைய தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். கட்டிட வடிவமைப்பு குறித்த பணிகள் நடந்து வரும் நிலையில், 6 அல்லது 7 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கும். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பரில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கோவை தனியார் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிறகு, மதுரை அரசு மருத்துவமனை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மகத்தான சாதனை படைத்திருக்கிறது. இதுவரை 36 எலும்புகள் நோயாளிகளிடம் இருந்து கொடையாக பெறப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளிகள் 2 பேரிடம் இருந்து எலும்புகள், ஜவ்வுகள் எடுக்கப்பட்டன. 7 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

* தமிழகத்தில் குரங்கம்மை இல்லை

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் கொரோனா, குரங்கு அம்மை பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவக்கல்லூரி வளாகத்தில், முன்னாள் மருத்துவ மாணவர்கள் சார்பில் ரூ.3.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தையும் அமைச்சர்திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘குரங்கு அம்மை நோய் பாதிப்பு தமிழகத்தில் இல்லை. இந்நோய் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது’’ என்றார்.

Related Stories: