44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சுற்றுலா நட்பு வாகன திட்டம் அறிமுகம்: வீரர்கள், வெளிநாட்டு பயணிகளை அழைத்து செல்வார்கள்

சென்னை: மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ‘சுற்றுலா நட்பு வாகன திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள 50 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் திறன் வளர்ப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சி வழங்கப்பட்டது.  

இதை தொடர்ந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகத்திற்கு வரும் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கென பிரத்யேகமாக சுற்றுலா நட்பு வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா நட்பு வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ணமயமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாமல்லபுரத்தில் உள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு சுற்றுலாதலங்கள் குறித்த விவரங்களை வழங்க புத்தாக்க பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டு சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, அண்ணா மேலாண்மை பணியாளர் கல்லூரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: