மதுரை விமான நிலையத்தில் ஆய்வு; குரங்கு அம்மை தடுப்புக்கு கூடுதல் நடவடிக்கை.! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: இன்று காலை மதுரை வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளிடம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அவருடன் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், மாநில சுகாதார பணிகள் செயலாளர் செந்தில்குமார், திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் உடனிருந்தனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில் பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரவல் தடுப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட போதே தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் முகத்தில் அல்லது முழங்கையில் ஏதாவது கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மாஸ் பீவர் ஸ்கிரீனிங் கேம்ப் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இந்த 72 நாடுகளில் 14 ஆயிரத்து 533 பேருக்கு குரங்கம்மை நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்தியாவில் கேரளா, டெல்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஒரு சிலருக்கு மட்டும் பாதிப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம்.  வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்படுகிறது. மழைக்காலம் வருவதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையோடு இணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவது. கொசு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் மேற்கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசு அறிவிக்கும் போது, பள்ளிகளில் சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் போன்ற அமைப்புகள் குரங்கம்மை நோய்க்கான தீர்வை அறிவுறுத்துகிறார்களோ, அதை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நிதியளிக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories: