ஓசூர் அருகே பேக்கரியில் வாங்கிய சாக்லேட் கேக்கில் ‘குட்கா’-பெற்றோர்கள் அதிர்ச்சி

ஓசூர் : ஓசூர் அருகே குழந்தைகளுக்காக பேக்கரியில் வாங்கிய சாக்லேட் கேக்கின் நடுவே குட்கா (பில்டர் ஹான்ஸ்) இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் ஏ.கே.காலனியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் தனது குழந்தைகளுக்கு, பாகலூரில் உள்ள ஒரு பேக்கரியில் 2 சாக்லேட் கேக்குகளை வாங்கியுள்ளார். பின்னர், வீட்டுக்கு சென்று, குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அப்போது ஒரு கேக்கின் நடுவே, தடை செய்யப்பட்ட குட்கா (பில்டர் ஹான்ஸ்) இருந்துள்ளது. இதனைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அந்த கேக்கை வாங்கிய பேக்கரிக்கே கொண்டு சென்று, குட்கா இருந்ததை காண்பித்துள்ளார். ஆனால், பேக்கரியில் இருந்தவர்கள் அவர் கூறியதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். குட்காவுடன் அந்த சாக்லேட் கேக்கை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால், அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடும். எனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவுப்பொருள் தயாரிப்பில் அலட்சியமாக செயல்பட்ட பேக்கரி கடை மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஓசூர் பகுதியில் உள்ள பேக்கரிகளில், உணவு பொருட்கள் தரமாக விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என சதீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: