பொள்ளாச்சியில் இருந்து தினமும் 3 லட்சம் இளநீர் வெளியூர் அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி : உற்பத்தி அதிகரிப்பால் பொள்ளாச்சியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 80சதவீதம் தென்னை சாகுபடியே உள்ளது. இதனால், பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும், பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, வெளி மார்க்கெட்டில், வரவேற்பு இன்னும் அதிகமாக உள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், இளநீர் அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் வரை தினமும் சுமார் 2.50லட்சம் இளநீர் வெளி வெளியூர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

 அதன்பின் கோடை மழையும், பின் பருவமழையும் ஆரம்பித்ததால், இளநீர் விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே, தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை, எப்போதும்  இல்லாத வகையில் தற்போது அதிகளவில் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து மழை காரணமாக, தென்னை செழித்து, அதிலிருந்து இளநீர் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து, குலை குலையாய் தொங்குகிறது.

 தற்போதைய சூழ்நிலையில், தேங்காய் விலை சரிவால், பெரும்பாலான விவசாயிகள், தேங்காய் பருமன் ஆவதற்கு முன்பே, இளநீராக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதை அதிகரித்துள்ளனர். கடந்த சில மாதமாக ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.29 முதல் அதிகபட்சமாக ரூ.31வரை இருந்தது. தமிழகத்தில் தற்போது பருவமழை அவ்வப்போது பெய்வதால், உள்ளூர் பகுதியில் விற்பனை குறைந்தாலும், வெளி மாநிலங்களில் இளநீரின் தேவை அதிகரிப்பால், அம்மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

 இதனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பொள்ளாச்சிக்கே நேரடியாக வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைவாக இருந்தாலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது.

 பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து கடந்த 2021ம் ஆண்டில் நாள் ஓன்றுக்கு அதிகபட்சமாக 2லட்சம் இளநீரே வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, வெளி மாநிலங்களுக்கு நாள் ஓன்றுக்கு 3லட்சம் வரை அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் வெளி மாநிலங்களில் இநீரின் தேவை அதிகரிப்பால், அதிக கிராக்கி ஏற்பட்டதன் காரணமாக, இளநீர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 2021ம் ஆண்டில் இதே நேரத்தில் ஒரு இளநீர் ரூ.21ஆக சரிந்தது. ஆனால் இந்த ஆண்டில், இளநீர் ஒன்று அதிகபட்சமாக ரூ.31வரை பண்ணை விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது.

 இதுகுறித்து, இளநீர் உற்பத்தியளார் சங்க தலைவர்  ஆனைமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா தடுப்பு நடவடிக்கை இருந்தபோது, அந்நேரத்தில் இளநீர் விற்பனை குறைவாக இருந்ததுடன், விலையும் சரிந்தது. சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு வரை, பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.18 முதல் அதிகபட்சமாக ரூ.21வரையே இருந்தது.

 ஆனால், கோடை மழை மற்றும் அதன்பின் சில வாரம் பெய்த பருவமழையால், இளநீர் உற்பத்தி அதிகமாகி, வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது.  

அதிலும் கடந்த சில வாரமாக, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நடக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது, நாள் ஒன்றுக்கு 5லட்சம் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது’ என்றார்.

Related Stories: