கார்பென்டரை ஆட்டோவில் கடத்தி செல்போன் பறிப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (57), கார்பென்டர். இவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல தண்டையார்பேட்டை, பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் மாநகர பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர், கார்பென்டரை கடத்தி சரமாரி தாக்கி, அவரது விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு, கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து தண்டையார்பேட்டை ரோந்து போலீசாரிடம் பாஸ்கரன் தகவல் தெரிவித்தார். அந்த ஆசாமிகளை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

அதற்குள் ஆட்டோவில் இருந்து ஒரு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 3 பேர் மற்றும் ஆட்டோவை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த காக்கா (எ) கார்த்திக் (20), ராகுல் (எ) சூர்யா (20), சிவாஜி நகர் அப்பு (19) என தெரியவந்தது. இவர்கள் பகல் நேரங்களில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு, இரவு நேரத்தில் தனியே வருபவர்களிடம் செல்போன், பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். ஆட்டோ, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்

Related Stories: