மும்பையில் இருந்து சென்னைக்கு தங்க பிஸ்கட்டுடன் வந்தவரை கடத்திய கும்பலில் இருவர் சிக்கினர்: முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

திருவாரூர்: மும்பையில் இருந்து சென்னைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த நபரை கடத்திய 2 பேரை  போலீசார் கைது செய்தனர்.திருவாரூரை  சேர்ந்தவர் ஹாஜி (45). அங்கிருந்து  திருச்சிக்கு குடிபெயர்ந்து, செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர்  வெளிநாடுகளிலிருந்து தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பொருட்களை கடத்தி வரும்  குருவி தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தெலங்கானாவை  சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்க பிஸ்கட் கடத்தி  வருவதற்காக மும்பைக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு துணையாக சென்னையில்  செல்போன் கடையில் வேலை பார்க்கும் நண்பர் அவுரங்கசீப்பையும்  (36)  அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மும்பைக்கு சென்ற சங்கர், தலா ரூ.8 லட்சம் மதிப்புடைய 2 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாயில்  மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் மருத்துவமனை ஒன்றில் ஸ்கேன் செய்தபோது, ஒரு பிஸ்கட் மட்டுமே இருந்ததாகவும், மற்றொன்று மாயமாகி இருந்ததும்  தெரியவந்தது. இதுகுறித்து அவுரங்கசீப் ஹாஜியிடம் தெரிவித்தபோது, சங்கரை திருச்சிக்கு அழைத்து வருமாறு ஹாஜி தெரிவித்துள்ளார். அதன்படி திருச்சிக்கு வந்த சங்கரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து  மீண்டும் ஸ்கேன் செய்தபோதும் தங்க  பிஸ்கட் இல்லாதது தெரிய வந்தது.

இதனையடுத்து மற்றொறு தங்க பிஸ்கட் எங்கே என கேட்டு சங்கரை  தாக்கினர். இதனிடையே தனது  கணவரை 10 நாட்களாக காணவில்லை என சங்கரின் மனைவி மும்பை போலீசில் புகார்  அளித்துள்ளார். அவரை தேடி போலீசார் திருச்சி  சென்ற நிலையில், சங்கர் அங்கிருந்து காரைக்காலுக்கு கடத்தப்பட்டதாக தெரிய  வந்துள்ளது. அங்கு சென்ற போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல்  தப்பியோடியது.  சங்கரை மட்டும் போலீசார் மீட்டனர். ஹாஜி  உள்ளிட்ட கடத்தல் கும்பலை  தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் அவுரங்கசீப்பை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படிதிருவாரூர் மடப்புரத்தை  சேர்ந்த புறாவிஜய்யையும் (25) கைது செய்தனர். இருவரையும்  திருவாரூர்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, விசாரணைக்காக  மும்பைக்கு அழைத்துச் சென்றனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி ஹாஜி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த தியாகு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: