ரயில்வே வருமானத்தில் திருவனந்தபுரத்தை பின்னுக்கு தள்ளிய கோவை: அதிக வருமானம் ஈட்டி தந்தாலும் புறக்கணிக்கும் தென்னக ரயில்வே

பீளமேடு: தென்னக ரயில்வேயின் வருமானத்தில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை கோவை ரயில் நிலையம் பின்னுக்கு தள்ளியது. அதிக வருமானத்தை ஈட்டி தந்தாலும் கோவை மக்களின் கோரிக்கைகளை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ரயில் பயண ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தென்னக ரெயில்வேயின் தலைமையிடம் சென்னையில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்களும், கேரளாவில் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களும் வருகின்றன.

இவற்றின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. தென்னக ரெயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள சென்னை சென்டிரல், சென்னை எழும்பூர் ஆகிய ரயில்நிலையங்கள் முதல் இடத்தையும் கோவை ரயில் நிலையம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. தாம்பரம் மற்றும் மதுரை ரயில் நிலையங்கள் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளன. ஆனால் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

கேரளாவில் உள்ள மற்றொரு ரயில்வே கோட்டமான பாலக்காடு 15வது இடத்தை பிடித்துள்ளது. ரயில் பயண ஆர்வலர்கள் கூறியதாவது: தென்னக ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் ஐந்து ரயில் நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த ரயில் நிலையங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக வருமனத்தை ஈட்டித் தரும் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தென்னக ரெயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கோவை, திண்டுக்கல் அகல ரயில் பாதையாக மாற்றப்படுவதற்கு முன்பு இயக்கப்பட்ட பாரம்பரியமிக்க ராமேஸ்வரம் ரயில் உள்பட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கங்கள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலில் பாலக்காட்டிலிருந்து போதிய பயணிகள் செல்லாததால் அதை கோவை அல்லது மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்கு தென்னக ரயில்வே நிர்வாக மறுத்து விட்டது. அதற்கு மாறாக கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் விடுவதாக தென்னக ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரயில் வருமானத்தில் 15வது இடத்தில் உள்ள பாலக்காடுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் 3வது இடத்தில் உள்ள கோவைக்கு தென்னக ரெயில்வே தராதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு ஒரே தீர்வு கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி வரை உள்ள 21 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை சேலம் கோட்டம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைப்பதுதான்.

தற்போது இந்த பாதை பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ளதால் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயிலுக்கு பாலக்காடு, மதுரை, சேலம் ஆகிய 3 கோட்டங்களிடம் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. எனவே கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தென்னக ரயில்வே உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: