பொள்ளாச்சி-பாலக்காடு நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரம்: சிறுபாலங்களும் அகற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி-பாலக்காடு 4 வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள முக்கிய ரோடுகள், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகைக்கு தகுந்தார்போல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் நகரிலிருந்து பிரிந்து செல்லும், தமிழக-கேரளாவுக்கிடையே போக்குவரத்து அதிகமுள்ள பாலக்காடு ரோட்டில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நகரிலிருந்து சுமார் 12 கிமீ கடந்ததும் கேரள மாநில பகுதி என்பதால், இந்த வழியாக சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இருப்பினும், பல ஆண்டுகளாக பாலக்காடு ரோட்டின் பெரும் பகுதி குறுகலான பாதைபோல் 7 முதல் 8 மீட்டர் அகலத்திலேயே இரு வழிப்பாதையாக இருந்துள்ளது. இதனால் அந்த வழியாக அதிவேகமாக வரும் கனரக வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்து அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாலக்காடு ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து, சுமார் 5 ஆண்டுக்கு முன்பு ரோடு அகலப்படுத்தப்பட்டாலும், சுமார் 8 கிமீ தூரத்துக்கு இரு வழிபாதையாகவே தொடர்ந்திருந்தது.

தமிழக-கேரள மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து அதிகமுள்ள, பாலக்காடு ரோட்டை முழுமையாக 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 8 மீட்டர் அகலத்திலேயே ரோடு இருந்துள்ளது. அதற்கு மாற்றாக தற்போது, சுமார் 17 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.71 கோடியில்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை குறுகலான பகுதியாக இருந்த ஜமீன்முத்தூர், கருமாபுரம், பொன்னாயூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில், பெரும்பாலும் நிலம் கையகப்படுத்தப்படாமலே, ஆக்கிரமிப்புகளை பெரும்பாலும் அகற்றப்பட்டு ரோடு விரிவாக்க பணி நடைபெற்றுள்ளது.

இதற்காக ரோட்டோரம் இருந்த பழைமையான மரங்கள் சில அப்புப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கருமாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் 2 வழிப்பாதையாக இருந்த குறுகிய பாலங்களின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு, அதனுடனே இணைத்து 4 வழிப்பாதையாக மாற்றுவதற்கான பணியும் நடக்கிறது.   சமீபத்தில், 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்ட சில இடங்களில், நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை குழு  இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியையும், அதன் தரத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பாலக்காடுரோடு விரிவாக்க பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், கேரள மாநிலம் கோபாலபுரம் வரையிலும் உள்ள பாலக்காடு ரோட்டில் 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அந்த வழியாக பகல், இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்திற்கேற்ப நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 இதில் குறிப்பாக, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் முக்கிய ரோடாக, பாலக்காடு ரோடு அமைந்துள்ளது. பாலக்காடு ரோடு விரிவாக்க பணி அதன் ஆரம்ப முதல் நிறைவு பகுதி வரை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. குறுகலான பகுதியில் ரோட்டை அகலப்படுத்தி வாகனங்கள் விரைந்து செல்லும் வகையிலான நடவடிக்கை பகல், இரவு என தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே, நகரிலிருந்து பிரிந்து செல்லும் கோவை ரோடு, உடுமலை ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்டவை பெரும் பகுதி 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாலக்காடு ரோடும் முழுமையாக 4 வழிச்சாலையாக மாறியபின், வாகன போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது’’ என்றனர்.

Related Stories: