தமிழகத்தில் 7,689 மையங்களில் 22.02 லட்சம் பேர் எழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 7,689 மையங்களில் 22.02 லட்சம் பேர் எழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர் ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் பெண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. மொத்தம் 7,689 மையங்கள் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 7689 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 1,10,150 கண்காணிப்பாளர், 1932 நடமாடும் குழுக்கள், 534 பறக்கும் படையினர், 7689 வீடியோ பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் மட்டும் 503 மையங்களில் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: