கொளப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம்: வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெடுங்குன்றம் ஊராட்சி. இங்கு,  நெடுங்குன்றம், கொளப்பாக்கம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம், ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாசீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, ஏவிஎம் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த்  மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி, ஈசிஜி பரிசோதனை வசதி, ஆரம்பகால புற்று நோய் கண்டுபிடிப்பு, மகளிருக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரில் சர்க்கரை உப்பு பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை கொழுப்பின் அளவு பரிசோதனை, ரத்த வகைப்படுத்துதல் சோதனை, செமி ஆட்டோ அனலைசர் மூலம் சிறப்பு பரிசோதனை, இருதயம், சிறுநீரகம், எலும்பு, காது, மூக்கு,  தொண்டை, பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், குழந்தைகள் நல சிறப்பு பிரிவு, தோல் நோய் பிரிவு, புற்றுநோய் பிரிவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

இதில், 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இறுதியில்,  ஊராட்சி செயலர் ராமானுஜம் நன்றி கூறினார். இதனையடுத்து ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கிராமம், சீனிவாச பெருமாள் பிரதான சாலையில் புதிதாக ₹9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாசீனிவாசனின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதல் அறிக்கையான சீனிவாச பெருமாள் பிரதான சாலையை அமைத்து திறந்து வைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: