5 ஆண்டு ஜனாதிபதி பதவிக் காலம் இன்றுடன் நிறைவு; எல்லாவற்றையும் விட நாடு பெரியது: பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

புதுடெல்லி: ‘அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்,’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக  ராம்நாத் கோவிந்த் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது பதவிக்காலம் இன்றுடன்  நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதில், ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  பதவியேற்றேன். அனைத்து எம்பி.க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்பி.க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ஜனாதிபதியாக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். ஆதரவு அளித்த பிரதமர் மற்றும் எம்பி.க்கள் அனைவருக்கும் நன்றி. அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன். கோவிட்டை கட்டுப்படுத்தியதற்காக இந்தியாவை அனைத்து நாடுகளும் புகழ்கின்றன. அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும்.  எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.  தமது இலட்சியத்தை அடைவதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில்  எதிர்ப்பதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், அது காந்திய முறையில் இருக்க வேண்டும்.’’  என்றார். இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், எம்பி.க்கள் கலந்து கொண்டனர்.

மோடி விருந்து: ஓய்வு பெறும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி  பிரிவு உபசார விருந்து வழங்கினார். இதில்  ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா, பல்வேறு மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும்,  பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முர்முவுக்காக பிரார்த்தனை: உபர்பேடா கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி சேவை, பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள்  உள்ளன. வேறு என்ன எங்களுக்கு தேவை இருக்கிறது. திரவுபதி முர்மு வளமாக இருக்க நாங்கள் பிரார்த்தனை செய்வோம்,’’ என்றனர். உபர்பேடாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும் என்று உள்ளூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க திரவுபதி முர்முவின் சகோதரர் தரணிசென்,  டெல்லி செல்கிறார்.

Related Stories: