5 நாள் பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் குறித்து புகார் அளிக்க திட்டம்: புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கிறார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் பற்றி புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமும் சென்றார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 25ம் தேதி புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச எடப்பாடி நேரம் கேட்டுள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு மோடி நேரம் ஒதுக்கவில்லை. ஆனாலும், 5 நாள் டெல்லியிலேயே தங்கி இருக்கிறார். இந்த இடைபட்ட நாளில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதுதவிர பாஜ மூத்த தலைவர் அமித்ஷா உள்ளிட்ட சிலரையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அப்படி சந்திக்கும்போது, “தமிழகத்தில் தான் முதல்வராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. தற்போது அந்த கான்ட்ராக்டர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, முன்னாள் அமைச்சர்களின்

வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதுபோன்ற சோதனைகளை நிறுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

மேலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டும் முழுமையாக செயல்பட முடியவில்லை. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து வருகிறார். இந்த விசாரணைகள் முடிந்த பிறகுதான் அதிமுக முழுமையாக தன் கைவசம் வரும் சூழ்நிலை உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இல்லை. 95 சதவீதத்துக்கும் மேல் நிர்வாகிகள் எனக்கு ஆதரவு உள்ளது. அதனால், கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் எந்த குறுக்கீடும் செய்யாமல் இருக்க உதவ வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் நேரில் புகார் அளிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நீங்கள் ஆதரவு தெரிவித்தால் கட்சி முழுமையாக என் கட்டுப்பாட்டில் வரும்.

அப்போதுதான் பாஜ கூட்டணி வலிமையாக இருக்கும் என்றும் மோடியிடம் புகார் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அதிமுக கட்சியை தன்வசம் முழுமையாக கொண்டு வர இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் எடப்பாடி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: