டவுன் காவல் நிலைய டிரைவர் பணிக்கு கட்டாயப்படுத்தப்படும் நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார்-டிராபிக்கை கையாள்வதில் சிக்கல்

நெல்லை : நெல்லை டவுன் காவல் நிலைய வாகனத்துக்கு கட்டாயப்படுத்தி டிரைவர் பணிக்கு போக்குவரத்து போலீசாரை அனுப்புவதால்,  அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நெல்லை மாநகர காவல்துறையில் உள்ள 8 போலீஸ் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு தனியாக இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் நிலைய பேட்ரோல் வாகனத்தை இயக்க மாநகர ஆயுதப்படையிலிருந்து டிரைவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

காவல் நிலையங்களில் உள்ள வாகனங்களை இயக்கும் ஆயுதப்படை டிரைவர்கள் விடுமுறை மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மாநகர ஆயுதப்படையில் இருந்து டிரைவர்கள் மாற்று ஏற்பாடு செய்யப்படும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. மாநகர போலீஸ் நிலையங்களில் நெல்லை டவுன் போலீஸ் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது.  நெல்லை டவுன் காவல்நிலையத்துக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளான மாநகராட்சி அலுவலகம், டவுன் ஆர்ச், நயினார்குளம் மார்க்கெட், ரதவீதிகள், சொக்கப்பனை முக்கு, திருப்பணி முக்கு, வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் கோயில் பகுதி, தெற்கு மவுண்ட் சாலை, காட்சி மண்டபம், லாலா சத்திரம் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெருக்கடியை தீர்க்கவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்காக டவுன் போக்குவரத்து பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டுக்கள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகன டிரைவர் விடுமுறை எடுத்தால் அதற்கு மாற்றாக போக்குவரத்து போலீசாரை டிரைவர் பணிக்கு கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீஸ் நிலையங்களில் டிரைவர்கள் விடுமுறை எடுக்கும்பட்சத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யாமல் போக்குவரத்து போலீசாரை டிரைவர் பணிக்கு மாற்றுவதால் வாகன நெருக்கடி மிகுந்த டவுன் பகுதியில் போக்குவரத்தை கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. போக்குவரத்துபோலீசார் சிரமத்திற்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இவ்வாறு பற்றாக்குறையாக உள்ள போக்குவரத்து பிரிவு போலீசாரை மாற்றுப்பணிக்கு ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவே மாநகர போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: