சாலையில் தேங்கிய மழைநீர் கால்வாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு சீரமைக்கப்படும்: திமுக கவுன்சிலர் தகவல்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் திடீர் மழையால், சாலையில் தேங்கி நிற்கும்  மழைநீர் மற்றும் கால்வாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கவுன்சிலர் கூறியுள்ளார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

அதன் பிறகு மாலை 4 மணிக்கு கரு மேகங்கள்  இருள் சூழ்ந்து காணப்பட்டது.  பின்னர், திடீரென மழை பெய்தது. இதனால், திருவள்ளூர் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் மழைநீர் தேங்கி நின்று அங்குள்ள பாலாஜி நகர்,   விவேகானந்தர் முதல் தெரு,  இரண்டாவது தெருக்களில் மழைநீர் புகுந்தது, இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்பட்டனர். இதேபோல், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை  சாலையில்  புதிய மேம்பாலத்தின் அருகில் மழை நீர் தேங்கி முட்டியளவு  நின்றது.  இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவிகள் சிரமப்பட்டனர். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சாலையில் தேங்கி நின்ற மழைநீரை,  கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி மழைநீரை வடிய செய்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், இனி வருவது மழை காலம் என்பதால் கால்வாய் அடைப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து அந்த பகுதி கவுன்சிலர் ( திமுக ) மணிகண்டன் (எ) கோல்டு மணி கூறியதாவது,: ஊத்துக்கோட்டையில் உள்ள திருவள்ளூர் சாலையில் மழை காலங்கள் மழை பெய்தால் மழைநீர் சாலையிலேயே தேங்கி விடுகிறது.  இதனால், கொசுக்கள் பூச்சிகள் உற்பத்தியாகி  மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இனி வருவது மழை காலம் என்பதால் பேரூராட்சி ஊழியர்களை வைத்து கால்வாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

Related Stories: