கொத்தவால்சாவடி பகுதியில் ரூ.8 லட்சம் பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி, 5வது மண்டல நல அலுவலர் டாக்டர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் பகுதி சுகாதார அலுவலர்கள் மாப்பிள்ளை துரை, வாசுதேவன், ஆய்வாளர்கள் சிவபாலன், இஸ்மாயில் ஆகியோர் நேற்று மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கொத்தவால்சாவடி, மலையபெருமாள் தெருவில் ஒரு குடோனில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு, டீ கப் உள்பட பொருட்கள் பதுக்கி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அங்கிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடோனில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொத்தவால்சாவடி, பாரிமுனை பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: