மானாமதுரை பகுதியில் மூலப்பொருள் பற்றாக்குறையால் குறைந்து வரும் செங்கல் உற்பத்தி கட்டுமான பணிகளில் சுணக்கம் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

மானாமதுரை: மூலப்பொருள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் மானாமதுரை வட்டாரத்தில் செங்கல் உற்பத்தி குறைந்து வருகிறது. தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் செங்கல் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான சவுடு மண் ஏராளமான உள்ளது. அரசு அனுமதி பெற்று தனியார் தோட்டங்கள், வயல்களில் இருந்து எடுக்கப்படும் சவுடு மண் மூலம் செங்கல் தயாரிப்பு நடைபெற்று வந்தது. மேலும் செங்கல் தயாரிப்புக்கு தேவையான கரம்பை, வண்டல் மண், களிமண் ஆகியவை இப்பகுதியில் உள்ள நிலங்கள், கண்மாய்களில் இருந்து எடுகப்படுகிறது. இதனால் மானாமதுரை வட்டாரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் தயாரிக்கும் சேம்பர்கள், காளவாசல்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில கடந்த 2019ம் ஆண்டு முதல் சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட போது அதிமுக கட்சியினர் விதிமுறை மீறி சவுடு மண் அள்ளுவதற்கு பதிலாக அதற்கு கீழே இருந்த ஆற்று மணலை அனுமதி வழங்கப்பட்ட பகுதியை சேர்ந்த கிராமத்தினரின் எதிர்ப்பையும் சட்டவிரோதமாக அள்ளி விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்தனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டவிரோதமாக நடந்த சவுடு மண் குவாரிகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தவின் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள மண்ணை கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக செங்கல் உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால் செங்கற்களுக்கு கூடுதல் வலிமை தரக்கூடிய செம்மண், கரம்பை மண், களிமண் ஆகியவையும் எளிதில் கிடைப்பதில்லை. மேலும் செங்கற்களை சுட்டு தயார் செய்யப்படும் சீமை கருவேல மரங்களின் விலை டன் ஒன்றுக்கு  3 ஆயிரத்து 400 ரூபாய்க்கு சென்று விட்டது. இதனால் செங்கல் ஒன்றின் விலை ரூ.10 வரை இருப்பதால் வீடுகட்டுவோர், பொறியாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் சுந்தரராஜன் கூறுகையில், மானாமதுரையில் பொதுப்ணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் தொடர்பாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதேபோல தனியார் கட்டிடங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மானாமதுரை பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல் கிடைக்க வில்லை. இதனால் செங்கல் வரும் வரையில் கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்திருக்க வேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளது. செங்கல் தற்போது ஒரு லோடு (மூவாயிரம் கல்) ரூ.31 ஆயிரத்திற்கு சென்று விட்டது. முழு பணமும் கட்டினாலும் பத்து நாட்களுக்கு மேல் டெலிவரி செய்கின்றனர். குறித்த நேரத்தில் கட்டுபடியாக கூடிய விலையில் செங்கல் கிடைத்தால் தான் கட்டுமான பணிகளை தொடர முடியும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறும்போது, சீமை கருவேல மரங்கள் முன்பு ஒரு டன் ரூ.2 ஆயிரத்து 500 என்ற அளவில் இருந்தது. தற்போது ரூ.3 ஆயிரத்து 400 வரை உயர்ந்துள்ளது.

செங்கல் உற்பத்தி செய்ய தேவையான சவுடுமண் பெர்மிட் இதுவரை வழங்கப்பட வில்லை. இருப்பு வைக்கப்பட்டுள்ள பழைய மண்ணை கொண்டு தொழில் செய்து வருகின்றோம். வடமாநில தொழிலாளர்களுக்கான உணவு உறைவிடம் மருத்துவ செலவும் அதிகரித்து விட்டது. உள்ளூர் தொழிலாளர் தட்டுப்பாடும் அதிகரித்து விட்டது. இதனால் குறித்த நேரத்தில் செங்கற்களை விநியோகம் செயய முடிய வில்லை. செங்கல் உற்பத்திக்கு தேவையான சவுடு, கரம்பை, களிமண், செம்மண், விறகு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவி செய்தால் தான் செங்கல் உற்பத்தி அதிகரித்து தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும் என்றனர்.   

Related Stories: