சென்னையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும் தலைதூக்கும் ‘ரூட்டு தல’ பிரச்னை: போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு

பெரம்பூர்: கல்வி ஒன்றே இளம் தலைமுறையினர் வாழ்வில் முன்னேற ஒரே வழி. இதை உணர்ந்த பெரும்பாலான பெற்றோர் தாங்கள் கஷ்டப்பட்டாலும், தங்களது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற்றோர்கள் செய்து தருகின்றனர். ஆனால், இதை உணராத பல மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என வழித்தடம் மாறி தங்களின் எதிர்காலத்தை இழந்து விடுகின்றனர்.குறிப்பாக, வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பும் மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திற்கு வரும் வரை சாதுவாகவும், அதன் பின்பு மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், ஒரு பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு செல்லும் வரை அந்த பேருந்து தடத்தினை எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு என்று ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து அந்த தலைவனுக்கு ‘ரூட்டு தல’ என பெயர் வைக்கின்றனர்.அந்த வழித்தடத்தில் அந்த மாணவர்கள் வைத்தது தான் சட்டம். அரசியல், சினிமா போன்ற துறைகளில் எப்படி ஒருவர் கோலோச்சி அதிகாரம் மிக்கவராக இருக்கிறாரோ அதேபோன்று ஒரு அதிகாரம் வந்து விட்டதாக இந்த ரூட்டு தலைகள் நினைத்துக் கொண்டு உலா வருகின்றனர். இவர்கள் செய்யும் அலப்பறைகள் எண்ணில் அடங்காதவை. வழித்தடத்தில் ஏற்படும் பஞ்சாயத்துகள், காதல் பிரச்னைகள், கானா பாடல்கள், பேருந்தில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வர்.

குறிப்பாக, யார் பெரிய ஆள் என்பதில் ரூட்டு தலைகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதனால், மாணவர்கள் நடுரோட்டில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொள்வர். கடந்த காலங்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர்கள் மற்றும் சென்னையில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டு கைகளில் கத்தியுடன் சாலைகளில் சண்டை போட்டு வந்தனர்.அதன் பிறகு சென்னையில் உள்ள வழித்தடங்களில் உள்ள அனைத்து ரூட்டு தலைகளுக்கும் போலீசார் ஸ்கெட்ச் போட்டு 90 ரூட்டு தலைகளை மொத்தமாக பிடித்து, அவர்களின் முகவரி, பெற்றோர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஓரளவிற்கு ரூட்டு தலை செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை ‘‘பஸ் டே’’ என்ற பெயரில் இவர்கள் செய்யும் அலப்பறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், சென்னையில் பஸ் டே கொண்டாட தடை விதிக்கப்பட்டது. தற்போதும் அந்த தடை உள்ளது.இந்நிலையில், சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஸ்செமஸ்டர் தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் வகுப்புகள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் நாள் கல்லூரிக்கு சென்றனர். அப்போது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கும்பலாக ஒன்று கூடி நடுரோட்டில் கோஷமிட்டபடி  கல்லூரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக செயின்ட் ஜார்ஜ் பள்ளி பேருந்து நிறுத்ததில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஒரு மாநகர பேருந்தை பிடித்து, சாலையில் பட்டாசுகள் வெடித்தபடி பஸ் டே கொண்டாடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தாங்கள் வரும் ரூட் பேனரையும் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் அங்கு வந்து மாணவர்களை சாலைக்கு வராமல் கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர்.தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் ரூட்டைச் சேர்ந்த சுமார் 20 பேர் உட்பட திருத்தணி, பிராட்வே, பூந்தமல்லி ரயில் ரூட் மாணவர்கள் மற்றும் பேருந்து ரூட் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின் கல்லூரிக்குள் சென்றனர்.

ஆனால் மாலை அணிவிக்க வந்த முன்னாள் ரூட் தலைகளை போலீசார் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். பஸ் டே உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் டே கொண்டாட்டம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்பும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் போலீசார் எச்சரிக்கையை மீறி, மாணவர்கள் ரூட்டு தல பிரச்னையை மீண்டும் கையில் எடுப்பதால் பொதுமக்கள், மாநகர பஸ், கண்டக்டர்கள் பீதியில் உள்ளனர். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து ரூட்டு தல மற்றும் மாணவர்கள் மோதல் சம்பவங்களை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: