இலங்கையின் தற்போதைய நிலைமை இந்தியாவை கவலை அடைய செய்கிறது: அனைத்து கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் வேதனை

புதுடெல்லி: இலங்கையின் தற்போதைய நிலவரம் இந்தியாவை கவலையடைய செய்துள்ளதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இன்றி, 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பாக இலங்கை நிலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டுமென்று திமுக, அதிமுக கட்சிகள் ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டன.

இதைத் தொடர் ந்து, ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், திமுக எம்பி. டிஆர். பாலு, எம்எம். அப்துல்லா, முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர்  ப.சிதம்பரம், எம்பி. மாணிக்கம் தாகூர், வைகோ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்,  தேசிய மாநாடு, ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக கட்சி எம்பிக்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ``இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத கடும் பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்கவே இந்த அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. நமது அண்டை நாடு என்பதால் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவுகள் இயற்கையாகவே இந்தியாவை பாதிக்கும். இலங்கையின் மோசமான நிலவரம் இந்தியாவை கவலையடைய செய்துள்ளது. இதே போன்ற நிலை இந்தியாவில் ஏற்படுமா? என்று சிலர் தவறான ஓப்பீடுகள் அடிப்படையில் கேள்வி எழுப்புகின்றனர்,’’ என்று கூறினார்.

Related Stories: