போக்குவரத்து மிகுந்த ஈவெரா நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டம்: கோயம்பேடு முதல் கீழ்ப்பாக்கம் வரை கடும் நெரிசல்

சென்னை: போலீசாரின் தடையை மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு முதல் பச்சையப்பன் கல்லூரி வரை மாநகர பேருந்தை வழிமறித்து ‘பஸ் டே’ கொண்டாடியதால், ஈவெரா சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே’ கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை மீறி கல்லூரி மாணவர்கள் யாரேனும் பேருந்துகளை சிறைப்பிடித்தோ அல்லது பேருந்தில் நடனமாடியோ பொதுமக்கள், பயணிகளுக்கு தொந்தரவு செய்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வு விடுமுறை முடிந்து சென்னையில் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் கல்லூரிக்கு வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை (த.எ.53 பி) மாநகர பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து அதில் ஏறினர். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பேருந்து முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, கையில் பேனருடன் நடந்து ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கோயம்பேடு முதல் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி நுழைவாயில் வரை மாணவர்கள் மாநகர பேருந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, பேருந்து முன்பு நடந்தே ‘பஸ் டே’ கொண்டாடினர்.

இதனால் ஈவெரா நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில மாணவர்கள் பேருந்து முன்பு தங்களது செல்போனில் பிடித்த பாடல்களை ஒலிக்க செய்து, நடனமாடியும், பாடல் பாடியும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஈவெரா ெநடுஞ்சாலையின் கோயம்பேடு முதல் கீழ்ப்பாக்கம் வரை 2 மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்களை பிடிக்க விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கவனித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார், யார் என்பது குறித்து வீடியோ பதிவுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: