திருப்போரூர் அருகே நடத்துனரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது: ஒருவருக்கு வலை

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்தள்ள மருதேரியில் இருந்து சிங்கபெருமாள் கோயில் வரை செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தடம் எண் (60எம்) என்ற நகரப்பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு மருதேரி கிராமத்திற்கு பேருந்து வந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. பேருந்தில் கொண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனர் செந்தில்குமார் (38), செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியைச் சேர்ந்த நடத்துனர் கோபாலகிருஷ்ணன் (57) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

அப்போது திடீரென மூன்று பேரும் நடத்துனர் கோபால கிருஷ்ணனை தாக்கி அவரிடமிருந்த பணப்பையை பறித்தனர். தடுக்க வந்த ஓட்டுனர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில், அவரது கை, தலை போன்ற இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த மூன்று பேர் அவர்களிடமிருந்த பணப்பையையும், 2 செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அந்த பையில் ரூ.8500  ரொக்கம், ரூ.25000 ரூபாய் மதிப்புள்ள பயணச் சீட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் மூவரும் கொண்டங்கி கிராமத்தில் உள்ள தனியார் நர்சரி ஒன்றில் செடிகளை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்த மினி வேனை மடக்கி வேனை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி (30) என்பவரை தாக்கி, அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். இரு சம்பவங் களிலும் ஒரே கும்பலே ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பேருந்து நடத்துனர்  கோபாலகிருஷ்ணன் திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும்,  பல்வேறு சிசிடிவி கேமரா கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், சாலவாக்கம் அடுத்த குறும்பிறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (24), சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (23), ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (24) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குரும்பிறை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பதுங்கி இருந்த இளங்கோவன் (24) மற்றும் பிரவீன்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 8 செல்போன்கள், 3 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (23), போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: