மடையத்தூர் ஊராட்சியில் ஒருதலைபட்சமாக நீர்ப்பாசன குழு பதவிகளுக்கு தேர்தல்: மீண்டும் நடந்த விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: மடையத்தூர் ஊராட்சியில் ஒரு தலைப்பட்சமாக நீர்ப்பாசன குழு தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. இதனை ரத்து செய்து மீண்டும் நாயமாக நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை  மனு அளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மடையத்தூர் ஊராட்சியில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் 120 ஏக்கர் பரப்பளவிலான ஏரி மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, அரசுக்கு சொந்தமான ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகளை கொண்டு, நீர்ப்பாசன குழு தலைவர், உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மடையத்தூர் ஏரி நீர்ப்பாசன குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் நடைபெற்றது.

மனுதாக்கலின்போது விவசாயிகள் சார்பில் தலைவர், உறுப்பினர்களுக்கு 10 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில், முன்னதாகவே ஒருதலைபட்சமாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் மடையத்தூர் விவசாயிகள், ஒருதலைபட்சமாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து, ஒருதலைபட்சமாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து, பாரபட்சமின்றி தேர்தல் நடத்தி விவசாயிகளின் ஆதரவை பெற்ற தலைவராகவும் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: