திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம் புஷ்ப விமானத்தில் மலையப்ப சுவாமி: தமிழக அமைச்சர் சேகர்பாபு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தமிழக இந்து ஆறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில், புஷ்ப விமானத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஏழுமலையானுக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஏம்எல்ஏ, தமிழகம் மற்றும் புதுச்சேரி தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோயில் செயல் அதிகாரி ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, மாலையில் கோயில் வெளியே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வீதி உலாவின்போது சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நான்கு மாட வீதியில் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கமிட்டும், கற்பூரம் ஏற்றியும் மனமுருகி வேண்டிக் கொண்டனர்.

* ஆர்ஜித சேவைகள் ரத்து

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய 6 மாத காலம் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் இருக்க வேண்டி துறவிகள் ஜீயர்கள், மடாதிபதிகள்  தீட்சையில் இருப்பது வழக்கம். ஏழுமலையான் கோயில் ஜீயர்கள் தீட்சையை தொடங்கியுள்ள நிலையில் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பட்டு வஸ்திரங்கள், நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை ஒட்டி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

Related Stories: