ஊத்துக்கோட்டை பகுதியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு நடத்தினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், சொத்து வரி சீராய்வு சம்பந்தமாக, கட்டிடத்தின் அளவீடு பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.  இந்த பணிகளை திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் திடீரென நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.  பின்னர், பஸ் நிலையம் அருகில் உள்ள தாமரை குளம் மற்றும் 5வது வார்டில் உள்ள குயவன் குளம் ஆகிய குளங்களில் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், பஜார் பகுதியில் உள்ள  கடைகளுக்கு சென்றார். அங்கு தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார். பின்னர், அதற்கு அபராதமும் விதித்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உதவி இயக்குனர் பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  பின்னர், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து வீடுகளில் உள்ளவர்களிடம் நேரில் சென்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் மாலா,  பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் மற்றும் கவுன்சிலர் கோகுல்கிருஷ்ணன், ஜீவா  மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: