சூரியன் எப்எம் சார்பில் 250 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்

சென்னை: சூரியன் எப்எம் உடன் இணைந்து சென்னை முழுவதும் 75 இடங்களில் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு பிரசாரத்தின்போது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 250 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

சென்னையை விபத்தில்லா மாநகரமாக மாற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 75 முக்கிய சிக்னல்களில் சூரியன் எப்எம் உடன் இணைந்து போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிவதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி.சராட்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைதொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள 75 முக்கிய சிக்னல்களில் சூரியன் எப்எம் உடன் இணைந்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த விழிப்புணர்வின்போது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 250 நபர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்கள் வழங்கப்பட்டது. மேலும், கட்டாயம் ஹெல்மெட் அணிவேன் என உறுதிமொழி கையெழுத்து முகாமில் 1000 வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: