பொன்னர் - சங்கர் நாடகத்திற்கு எதிரான மனு தள்ளுபடி; பேச்சுரிமையில் தலையிட்டால் நாட்டில் ஜனநாயகம் பறிபோகும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பொன்னர் - சங்கர் நாடகத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, பேச்சுரிமையில் தலையிட்டால் நாட்டில் ஜனநாயகம் பறி போகும் என கூறியுள்ளது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பொன்னர் - சங்கர் நாடகம் நடத்தப்படுகிறது. இந்த நாடகத்தில் வரும் பல உரையாடல்கள் குறிப்பிட்ட சில சமூகத்தினரின் மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளது. இதனால், பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, கரூர் மாவட்டத்தில் இந்த நாடகம் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், ‘‘நமது நாடு அரசியலமைப்பு  சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை உள்ளது. இதில் தலையிட்டால் ஜனநாயகம் பறிபோகும். நீதிமன்றம் சூப்பர் சென்சாரைப் போல செயல்பட முடியாது. பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை. பேச்சுரிமை இல்லாத பல நாடுகள் என்ன நிலையில் உள்ளன? பேச்சுரிமையில் தலையிடுவது என்பது அந்த நாடுகளைப் போலாகி விடும். அந்த காலத்தில் எம்.ஆர்.ராதா நாடகங்களில் கடும் விமர்சனம் இருக்கும். அது அவரது பேச்சுரிமை. அதைப் போலத்தான் இதுவும். பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையில் தலையிட முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: