தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். சிபிஎஸ்இ முடிவுகள் தாமதமாவது வருத்தம் அளிக்கிறது. ஜூலை மாதத்திற்குள்ளாகவே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது.

மாநில கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கேட்டு வரும் நிலையில் தேசிய கல்வி கொள்கை பற்றி ஆளுநர் பேசியது தவறு. தேசிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையையே வலியறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும். தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர். கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ் வழியில் கல்லூரிக் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழ் வழியில் கல்லூரி படிப்பு படிப்போருக்கு உதவித்தொகை வழங்கியவர் கலைஞர்.

தமிழ் மொழியை ஒன்றிய அரசு வளர்ப்பதாக கூறுவது தவறு. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மாநிலத்தின் சட்டத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை பார்ப்பதற்காக நியமனம் செய்யப்பட்டவரே ஆளுநர். அண்ணாமலை இதை தயவு செய்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆளுநர் இதேபோல செயல்பட்டால், காலத்திற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

Related Stories: