இபிஎஸ் வகித்து வந்த பதவி வேலுமணிக்கு வழங்கப்பட்டது பொன்னையன் கட்சி பதவி பறிப்பு: 11 மாவட்ட செயலாளர்களில் 10 பேர் அமைப்பு செயலாளராக நியமனம்; எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணிக்கு எடப்பாடி வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மேலும், அதிமுக துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி (முன்னாள் அமைச்சர்), நத்தம் விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின் மற்றும் தனபால் (முன்னாள் சபாநாயகர்), வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயாளர்), பாலகங்கா வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில், அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவி வழங்கி ‘டம்மி’ ஆக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், எஸ்.பி.வேலுமணிக்கு எடப்பாடி வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவி  வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. கே.பி.முனுசாமிக்கும் அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள 11 பேரில் 10 பேர் மாவட்ட செயலாளர்கள் ஆவர். தனபால் மட்டுமே தற்போது மாவட்ட செயலாளர் பதவியில் இல்லை. மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: