இளங்கலை மாணவர் சேர்க்கை; பல்கலை கழகங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, இளங்கலை படிப்பு  சேர்க்கைக்கான கடைசி தேதியை நிர்ணயம் செய்யும்படி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 

சில பல்கலைக் கழகங்கள் 2022-23ம் ஆண்டுக்கான இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு செய்யத் தொடங்கி உள்ளன. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் முன்பாக,  பல்கலைக் கழகங்கள் விண்ணப்பம் செய்வதற்கான கடைசித் தேதியை நிர்ணயம் செய்தால், சிபிஎஸ்இ மாணவர்கள் சேர்க்கையை இழக்க நேரிடும்.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்இ முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே இளங்கலை படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியை நிர்ணயம் செய்து, இந்த மாணவர்களுக்கு போதுமான அவகாசத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு இந்தாண்டு தாமதமானது. இதனால், முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories: