கரூர் பகுதியில் பலத்த சூறைகாற்று வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதம்

கரூர் : கரூர் மாவட்டத்தில் பரவலாக சுழன்று அடித்து வரும் சூறாவளி காற்றினால் வாழை போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய காலக்கட்டங்களில் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் (ஆனி, ஆடி மற்றும் ஆவணி) ஆடிக்காற்றில் அம்மியிரும் நகரும் என்பதற்கேற்ப சூறாவளி காற்று வீசி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்தாண்டும் கடந்த சில வாரங்களாக கரூர் மாவட்டம் முழுதும் குறிப்பாக கரூர் மாநகர பகுதிகள் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் அதிகளவு காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாக நடந்தும், வாகனங்களில் செல்லும் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, கண் பாதிப்பு போன்ற தொந்தரவுகளையும் அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாநகரின் புறநகர்ப்பகுதிகளிலும் காற்றின் தாக்கம் அதிகளவு உள்ளதால், கிராம பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை போன்ற பயிர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாதம் வரை காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்கு பிறகு, காற்றின் தாக்கம் குறைந்து, வடகிழக்கு பருவமழை துவங்கியதும் மழை பெய்யத் துவங்கி விடும் என்பதால் தற்போதைய நிலையில், அனைத்து தரப்பினர்களையும் வாட்டி வதக்கி வரும் சூறாவளி காற்று எப்போது முடிவடையும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: